இலங்கை மற்றும் அவுதிஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டிகளின் இணை அனுசரணையாளராக CDB இணைவு

கொழும்பு, ஜுன் 7, 2022 –  இலங்கை மற்றும் அவுதிரேலிய அணிகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டித் தொடர் 2022 இன் இணை அனுசரணையாளராக சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) கைகோர்த்துள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு வலுச்சேர்க்கும் முன்னேற்றகரமான நிறுவனம் எனும் வகையில், முழுப் போட்டித் தொடருக்கும் அனுசரணை வழங்குவதற்கு CDB முன்வந்துள்ளதுடன், தேசத்தின் விளையாட்டுச் சிறப்புக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. மேர்கன்டைல் கிரிக்கட் சம்மேளனத்தின் உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளுக்கு பல வருட காலமாக அனுசரணை வழங்கும் நிலையில், கிரிக்கட் விளையாட்டுடன் நீண்ட காலமாக பேணி வரும் தனது தொடர்புகளை பேணி வருகின்றது. மேலும் 2021 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த சுற்றுப் பயணத்தின் போதும் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கியிருந்தது.

2022 ஜுன் 7 ஆம் திகதி முதல் ஜுலை 12 ஆம் திகதி வரை இலங்கையில் அவுஸ்திரேலிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெறும் முழுமையான போட்டித் தொடராக அமைந்துள்ளது. உலகின் முதல் தரப்படுத்தலில் காணப்படும் டெஸ்ட் கிரிக்கட் அணி, இலங்கையுடன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. மூன்று T20 சர்வதேச போட்டிகளும், ஐந்து சர்வதேச ஒருநாள் போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

CDB இன் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்கள் மத்தியில் கிரிக்கட் எப்போதும் மிகவும் பிரபல்யம் பெற்ற விளையாட்டாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் சுற்றுப் பயணத்தின் போது, இலங்கை அணியின் வெற்றிக்கும், பொது மக்களுக்கும் வலுச் சேர்க்க முன்வந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் உண்மையான நண்பராக அவுஸ்திரேலிய கிரிக்கட் அமைந்திருப்பதுடன், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இந்த போட்டித் தொடரின் இணை அனுசரணையாளராக கைகோர்த்துள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்.” என்றார். 

கொழும்பு, காலி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் விளையாடப்படும் போட்டிகளில் இரு அணிகளும் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலாவது ரி20 போட்டி ஜுன் 7 ஆம் திகதி ஆரம்பமாவதுடன், இரண்டாம் போட்டியும் கொழும்பில் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து மூன்றாவது ரி20 போட்டி 11 ஆம் திகதி மற்றும் முதல் இரு ஒரு நாள் போட்டிகள் முறையே 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் கண்டியில் இடம்பெறும். எஞ்சிய மூன்று ஒரு நாள் போட்டிகளும் கொழும்பில் 19 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளன. காலியில் இரு டெஸ்ட் போட்டிகளும் ஜுன் 29 முதல் ஜுலை 3 வரையும், ஜுலை 8 முதல் ஜுலை 12 வரையும் இடம்பெறவுள்ளன. 

ஜயசிங்க மேலும் தெரிவிக்கையில், “இலங்கைக்கான அவுஸ்திரேலிய சுற்றுப் பயணம் மிகவும் முக்கியமான தருணத்தில் இடம்பெறுகின்றதால் அதிகளவு முக்கியத்துவம் பெறுகின்றது. எவ்வேளையிலும் மக்களுடன் இணைந்திருந்த நிறுவனம் எனும் வகையில், அவுஸ்திரேலிய அணிக்கு எமது புகழ்பெற்ற விருந்தோம்பலுடனான வரவேற்பை வழங்க இணையுமாறு CDB அனைத்து இலங்கையர்களிடமும் கோருகின்றது. கிரிக்கட் விளையாட்டின் வெற்றியை இரசித்து மகிழுமாறும் அழைக்கின்றது.” என்றார்.