தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் MCA Open Cricket ‘Sixes’ போட்டிகளுக்கு CDB அனுசரணை

இலங்கையின் முன்னணி வங்கிசாராத நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமான சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும், Mercantile Cricket Association Open Cricket ‘Sixes’ போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. வர்த்தக கிரிக்கட் சம்மேளனத்தினால் (MCA) வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் இந்த போட்டித் தொடர், நாட்டின் கூட்டாண்மைத் துறையில் 30 வருடங்களுக்கு மேலாக பெரும் எதிர்பார்ப்புகளுடன் கொண்டாடப்படும் கிரிக்கட் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. 

இந்த அனுசரணை குறித்து அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட CDB இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், வளர்ந்து வரும் வியாபாரச் செயற்பாடுகளுக்கான பிரதம அதிகாரியான (Chief Emergent Business Officer) கார்த்திக் இளங்கோவன் இந்த அனுசரணைக்கான காசோலையை, MCA அதிகாரிகளிடம் கையளித்திருந்தார். இந்த நிகழ்வில் MCA சார்பாக தலைவர் நளின் விக்ரமசிங்க மற்றும் அனுசரணை குழுமத்தின் செயலாளர் கே.டி.எஸ். கனிஷ்க மற்றும் நிறைவேற்றுக் குழு அங்கத்தவரும் தகவல் தொழில்நுட்ப குழுவின் தவிசாளருமான ஹசித்த தசநாயக்க ஆகிய அதிகாரிகளும், அனுசரணைக் குழு மற்றும் CDB இன் சார்பாக, சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் வணிக அபிவிருத்தி நிறைவேற்று அதிகாரி சசிந்திர முனசிங்க மற்றும் சந்தைப்படுத்தல் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 

ஊடகவியலாளர் சந்திப்பில் CDB இன் சந்தைப்படுத்தல் அதிகாரி சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவில் எதிர்பார்க்கப்படும் கிரிக்கட் போட்டித் தொடருக்கு இந்த ஆண்டில் மீண்டும் அனுசரணை வழங்குவதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம். இதனூடாக, விளையாட்டின் மீது நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். MCA Open Cricket Sixes போட்டித் தொடருடனான எமது பங்காண்மையை தொடர்வதையிட்டு CDB பெருமை கொள்வதுடன், இலங்கை கிரிக்கட்டின் எதிர்கால நட்சத்திரங்களின் மீது முதலீடுகளை மேற்கொள்வதாக நாம் நம்புகின்றோம். இந்த ஆண்டில் போட்டித் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், விறுவிறுப்பான போட்டித் தொடரை எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

இந்த ஆண்டின் இடம்பெறும் போட்டிகளின் Tier A மற்றும் Tier B பிரிவுகளில் மொத்தமாக 80 க்கும் அதிகமான போட்டிகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Tier A போட்டிகள் MCA, தேர்ஸ்டன் கல்லூரி மற்றும் கோல்ட்ஸ் கிரிக்கட் மைதானங்களில் இடம்பெறும். ஒவ்வொரு மைதானத்திலும் 12 அணிகள் 15 போட்டிகளில் பங்கேற்கும். Tier B போட்டிகளில் 72 அணிகள் 96 போட்டிகளில் விளையாடும். இந்தப் போட்டிகள் 5 பகுதிகளில் இடம்பெறும். MCA, வெஸ்லி கல்லூரி மற்றும் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி கிரிக்கட் மைதானங்களிலும், மத்தேகொட சாப்பர் மைதானம் மற்றும் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி மைதானங்களிலும் இடம்பெறும்.

2022 ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் MCA Open Cricket Sixes ஆரம்பமாகி, 2022 செப்டெம்பர் 04 ஆம் திகதி இறுதிப் போட்டியுடன் MCA மைதானத்தில் இடம்பெறும். இதன் போது வெற்றியாளர்களுக்கான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் அன்பளிப்புகள் வழங்கல் போன்றன இடம்பெறும்.