தேசிய குருதி நிலையத்தின் கோரிக்கைக்கு செவி சாய்த்து CDB இனால் இரத்த தான முகாம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

இக்கால கட்டத்தில் இலங்கையின் தேசிய குருதி நிலையம் அவசர குருதித் தேவையை கொண்டிருக்கின்றமையை கவனத்தில் கொண்டு, சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), வெற்றிகரமான குருதி நன்கொடை வழங்கும் இரத்த தான முகாமை முன்னெடுத்திருந்தது.

CDB இன் நலன்புரிச் சங்கம் மற்றும் மனித வளங்கள் பிரிவின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்த தான முகாம் தொடர்பில், சகல ஊழியர்களுக்கும் அறிவிக்கும் உள்ளக சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இலங்கை மக்களின் சுகாதார நலன் தொடர்பில் பெருமளவு கரிசனையுடன் பணியாற்றும் CDB இன் 140 ஊழியர்கள் இந்த இரத்த தான முகாமில் பங்கேற்றனர். இவ்வாறான இரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்த ஐந்தாவது தடவையாக இது அமைந்திருந்ததுடன், இதற்கு தேசிய குருதி நிலையத்தின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் இதர ஆதரவு ஊழியர்களின் உதவிகள் பெறப்பட்டிருந்தன.

இந்தத் திட்டம் தொடர்பில் மனித வளங்கள் மற்றும் நிர்வாகப் பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் திருமதி. நயந்தி கோதாகொட கருத்துத் தெரிவிக்கையில், “மனித குருதி என்பது விலை மதிப்பில்லாத சொத்து என்பதுடன், அடிக்கடி நன்கொடை வழங்குவதனூடாக மாத்திரமே போதியளவு குருதி விநியோகத்தை உறுதி செய்து கொள்ள முடியும். இந்தக் கால கட்டத்தில் தேசிய குருதி நிலையத்தின் இரத்த தானம் வழங்குமாறு மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றுவது எமது கடமை என CDB ஐச் சேர்ந்த நாம் உணர்ந்தோம். சகல குருதி மற்றும் குருதிசார் தயாரிப்புகளும் தன்னார்வ நன்கொடைகளினூடாக நிவர்த்தி செய்யப்படும் சில நாடுகளில் ஒன்றாக இலங்கையும் அமைந்துள்ளது. இவ்வாறான நன்கொடை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் தொடர்ச்சியாக ஆதரவை வழங்குவதுடன், அதனூடாக பல தசாப்த காலப்பகுதிக்கு தற்போதைய நிலையை பேணக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

இந்த இரத்த தான நிகழ்வின் வெற்றிகரமான பூர்த்தியைத் தொடர்ந்து, வழமையான இரத்த தானம் மேற்கொள்வோரைப் போன்று, ஆரோக்கியமாகத் திகழும் மக்களையும், இதுவரையில் இரத்த தானம் மேற்கொண்டிராதவர்களையும் ஊக்குவிக்கும் வகையில் செயலாற்றுவார்கள் என CDB எதிர்பார்க்கின்றது.