CDB’இன் 14ஆவது சிசுதிரி புலமைப்பரிசில் திட்டத்தினூடாக கல்வியைத் தொடர்வதில் நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள 150 திறமைசாலி மாணவர்களின் கனவுகளை எய்துவதற்கு வலுவூட்டல்

07 ஒக்டோபர் 2022, கொழும்பு:  தேசத்தின் இளம் தலைமுறையினரின் கல்விசார் எதிர்பார்ப்புகளுக்கு வலுச் சேர்க்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக, சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB), தனது 14ஆவது சிசுதிரி புலமைப்பரிசில் திட்டத்தை அண்மையில் முன்னெடுத்திருந்தது. இம்முறை நாட்டின் 25 மாவட்டங்களையும் சேர்ந்த நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள குடும்பங்களைச் சேர்ந்த 150 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களின் உயர் கல்வியைத் தொடர்வதற்கான ஆதரவு வழங்கப்பட்டிருந்தது.

2022 ஒக்டோபர் 7ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது, 2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஆகியவற்றில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்த மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் CDB இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும், முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நானயக்கார கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்த காலங்களைப் போல மோசமான காலப்பகுதிகளிலும் இலங்கையர்களின் எதிர்பார்ப்புகளுக்கு வலுவூட்டுவது என்பது CDB ஐச் சேர்ந்த எமது நோக்காக அமைந்துள்ளது. அதன் பிரகாரம், இந்த ஆண்டின் சிசுதிரி புலமைப்பரிசில்களினூடாக, முன்னைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட 100 புலமைப்பரிசுகளை 150 ஆக அதிகரித்திருந்தோம். அத்துடன் ஒவ்வொரு மாணவருக்கும் வருடாந்தம் வழங்கப்படும் பணத் தொகையையும் அதிகரித்துள்ளோம், அதனூடாக மேலும் அதிகளவு மாணவர்களுக்கு உதவக் கூடியதாக இருக்கும்.” என்றார்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்திருந்த நூறு சிறுவர்களுக்கு வருடாந்தம் ரூ. 12,500 வீதம், ஐந்தாண்டுகளுக்கான புலமைப்பரிசில் தலா ஒரு மாணவருக்கு மொத்தமாக ரூ. 62,500 வீதம் வழங்கப்பட்டது. அதேபோல, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்திருந்த 50 மாணவர்களுக்கு, வருடமொன்றுக்கு ரூ. 17,500 வீதம், தலா ஒரு மாணவருக்கு ரூ. 35,000 பெறுமதியான புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது.

CDB சந்தைப்படுத்தல் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “சிசுதிரி புலமைப்பரிசில் திட்டம் என்பது CDB இன் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலின் அங்கமாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் பிரகாரம் சிறுவர்களின் தரமான கல்வியினூடாக, சமூகத் தாக்கம் மற்றும் நிதி உள்ளடக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கி நாம் செயலாற்றுகின்றோம். சிசுதிரி புலமைப்பரிசில் திட்டத்தின் பருவம் 14 பூர்த்தியுடன், 2008 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரையில் 850 க்கும் அதிகமான திறமையான மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை CDB வழங்கியுள்ளது. தேசத்தின் எதிர்காலத் தலைமுறையின் எதிர்பார்ப்புகளைத் தொடர்வதற்கு இந்தத் திட்டத்தினூடாக பங்களிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், அதனூடாக தேசிய இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்கும் எனவும் கருதப்படுகின்றது.” என்றார்.