DFCC வங்கி மற்றும் சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) ஆகியன வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவைகளை விரிவுபடுத்துவதற்கான மூலோபாய கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளன

இலங்கையின் மிகவும் நம்பகமான வங்கிகளில் ஒன்றாகவும், மற்றும் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவைகளில் முன்னணி வகித்தும் வருகின்ற DFCC வங்கி பிஎல்சி, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் சேவையை மேம்படுத்துவதற்காக, இலங்கையின் முதல் நான்கு பாரிய, வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) உடன் கைகோர்த்துள்ளது. Lanka Money Transfer (LMT) தளத்தில் கூட்டாளராக மாறும் 10 வது நிதி நிறுவனமாக CDB மாறியுள்ளதுடன், இத்தளமானது DFCC வங்கி பிஎல்சி ஆல் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் இயக்கப்படும் ஒரு விரிவான, பாதுகாப்பான, தங்குதடையற்ற மற்றும் நம்பகமான பணம் அனுப்பும் சேவைக்கான தளமாகும். இதன் விளைவாக, 65 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள வங்கியான DFCC வங்கி பிஎல்சி, மற்றும் நன்கு ஸ்தாபிக்கப்பட்ட மற்றும் பல விருதுகளை வென்ற நிதி நிறுவனமான CDB, ஆகியன தற்போது வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கான சௌகரியமான சேவையை வழங்குவதற்காக இப்போது ஒன்றாகச் செயல்பட முடியும்.

பரஸ்பர நன்மைகளை ஈட்டும் நோக்கில் இந்த இரண்டு நிதிச் சேவை நிறுவனங்களுக்கிடையில் வலுவான பிணைப்பை உருவாக்குவதே இந்த கூட்டாண்மையின் நோக்கமாகும். DFCC வங்கியின் LMT என்ற வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்புவதற்கான தளம் வழியாக ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், ஓமான், இஸ்ரேல், அவுஸ்திரேலியா, ஜப்பான், ஹொங் கொங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் சேகரிப்பு மையங்களை இது மேலும் விரிவுபடுத்துவதுடன், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலமாக பணத்தை அனுப்ப விரும்புகின்ற வாடிக்கையாளர்களையும் சென்றடைகிறது. CDB ஐ LMT வலையமைப்புடன் சேர்ப்பது DFCC வங்கியைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்காகும். ஏனெனில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்பும் சந்தையில் தனது ஸ்தானத்தை மேலும் பலப்படுத்துவதை அது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்கூட்டாண்மையின் முக்கியத்துவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட DFCC வங்கி பிஎல்சி இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திமால் பெரேரா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்புவதற்கான எமது சேவைகளை விரிவுபடுத்துவதற்கும், எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தெரிவுகளை வழங்குவதற்கும் CDB உடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அணுகல்தன்மையை விரிவுபடுத்துவதன் மூலமும் தளத்தைப் பகிர்வதன் மூலமும் இந்த கூட்டாண்மையானது DFCC மற்றும் CDB ஆகிய இரு தரப்பினருக்கும் பரஸ்பரம் அனுகூலத்தைத் தோற்றுவிக்கிறது. சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கும் சர்வதேச தரங்களுக்கு இணங்குவதற்கும் நாங்கள் உறுதியான அர்ப்பணிப்புடன் உள்ளதுடன், அதை முன்னெடுப்பதற்கு இக்கூட்டாண்மை எமக்கு மேலும் கைகொடுக்கும்,” என்று குறிப்பிட்டார்.

சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) இன் முகாமைத்துவப் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மகேஷ் நாணயக்கார அவர்களும் இந்த கூட்டாண்மை குறித்த தனது நேர்மறையான உணர்வுகளை வெளிப்படுத்தினார். “எமது வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான, தங்குதடையற்ற, பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியில் வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்புகின்ற தெரிவுகளை வழங்க, DFCC வங்கியுடன் நாம் கூட்டிணைவது உண்மையில் மிகவும் உற்சாகமூட்டும் தருணம். இந்த கூட்டாண்மை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் அதேவேளையில், உள்நாட்டுக்கு அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு நாணயத்தின் அளவை அதிகரிக்கச் செய்வதன் மூலம் தற்போதைய பொருளாதார சவால்களை சமாளிக்கும் தேசிய முயற்சிக்கும் பங்களிப்பாக அமையும்,” என்று குறிப்பிட்டார்.

LMT தளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மகத்தான வாடிக்கையாளர் சேவைத் தரங்கள் உறுதிசெய்யப்படுகின்றன. ஒவ்வொரு பணப்பரிமாற்றமும் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படுவதுடன், ஒவ்வொரு பரிவர்த்தனையும் பயனாளியின் வாடிக்கையாளர் கணக்கில் நிகழ்நேரத்தில் உடனடியாக வரவு வைக்கப்படும். இது வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு தாயகத்திலுள்ள தமது குடும்பத்தினருக்கும் ஆதரவளிப்பதற்கு உறுதுணை புரிகின்றது. LMT இல் வேகமாக பணம் கிடைப்பது ஒரு பிரச்சினையாக இல்லாததால், முறையான வழிமுறைகளில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்கு இது மக்களை மேலும் ஊக்குவிக்கிறது. மேலும், சட்டபூர்வமாக பணத்தை அனுப்புவதன் மூலம், வரிச் சலுகைகள் உட்பட, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும் அதிகாரம் வாடிக்கையாளர்களுக்கு உண்டு.

இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்வதற்கு தேசிய மட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படுகின்ற பணப்பரிமாற்றங்கள் முதன்மையான முன்னுரிமையாகும். இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பி வைக்கப்படுகின்ற பணப்பரிமாற்றங்களை ஊக்குவிக்கும் வகையில், இலங்கையில் ஊக்கத்தொகையை அறிமுகப்படுத்தும் இலக்குடன் பிரச்சாரத்தை முன்னெடுத்த முதல் வங்கி DFCC என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய வங்கிகளும் இதனைப் பின்பற்றவும் வழிவகுத்தது. அதிகரித்த எண்ணிக்கையில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்களைச் சென்றடைவதன் மூலம், முறையான வழிமுறைகளில் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்படுகின்ற பணப் பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் வங்கி தொடர்ந்து தீவிரமாக உழைத்து வருகிறது. DFCC வங்கியும் CDB யும் ஒன்றிணைவதன் மூலம், வெளிநாடுகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கையர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில், இலங்கையிலுள்ள தமது குடும்பங்களை ஆதரிப்பதற்காக வழமையாக பணம் அனுப்பும் தேவைகளை நிவர்த்தி செய்ய ஒரு மகத்தான நடவடிக்கையை எடுத்துள்ளன.

 

திமால் பெரேரா – பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி DFCC வங்கி பிஎல்சி அவர்கள் மகேஷ் நாணயக்கார – முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி – CDB உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பரிமாறிக் கொள்ளும் காட்சி

இடமிருந்து வலமாக – லக்ஷித மதுரங்க, சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி – CDB, கிறிஸ்டி மரியதாசன் – உதவித் தலைவர், பணப் பரிமாற்றம் – DFCC வங்கி பிஎல்சி, அன்டன் ஆறுமுகம், சிரேஷ்ட துணைத் தலைவர், கடல்கடந்த வங்கிச்சேவை, பணப் பரிமாற்றம் மற்றும் வணிக மேம்பாடு – DFCC வங்கி பிஎல்சி, திமால் பெரேரா – பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி – DFCC வங்கி பிஎல்சி, மகேஷ் நாணயக்கார – முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி – CDB, சசீந்திர முனசிங்க – விற்பனைப் பணிப்பாளர் மற்றும் வணிக அபிவிருத்தி – CDB, ரொஷான் அபேகுணவர்தன – நிறுவன நிதிப் பணிப்பாளர் – CDB, அஷாத் வீரபங்சா – பணப் பரிமாற்றங்களுக்கான உதவிப் பொது முகாமையாளர் – CDB

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்

DFCC வங்கியானது 68 வருட பாரம்பரியம் கொண்ட, முழுமையான சேவைகளையும் வழங்கும் ஒரு வணிக வங்கியாகும், இது பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி சார்ந்த வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. வங்கியின் நிலைபேண்தகைமை மூலோபாயம் 2020 – 2030, சூழலைப் பேணிப் பாதுகாக்கும் முயற்சிகளுக்கான கடன் வசதி, நிலைபேண்தகு மற்றும் சமூக தொழில்முனைவோருக்கு ஆதரவை வழங்குவதன் மூலம் நிலைபேண்தகு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் எந்த சூழ்நிலையிலிருந்தும் மீண்டு எழும் திறன் கொண்ட வணிகங்களை உருவாக்குவது அடங்கலாக, மீண்டு எழுகின்ற திறனை மேம்படுத்துவதற்கு கூடுதலாக பங்களிக்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இது திகழ்கிறது. புகழ்மிக்க ஐக்கிய இராச்சியம், Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து இருந்து 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளது. அத்துடன், Euromoney இடமிருந்து ‘Market leader in Cash Management 2021’ விருதையும் பெற்றுள்ளது. Business Today சஞ்சிகையால் இலங்கையின் மிகச் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்கள் மத்தியில் DFCC வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. DFCC வங்கியானது Fitch Ratings Lanka Limited இடமிருந்து A- (lka) தரப்படுத்தலை பெற்றுள்ளது. இது இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் அனுமதி உரிமம் பெற்ற விசேட வங்கியாகும்.

CDB தொடர்பான விபரங்கள்

சிட்டிசன்ஸ் டெவலப்மென்ட் பிசினஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) இலங்கையில் உள்ள முதல் நான்கு, பாரிய, வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகவும், மற்றும் நாட்டின் மிகவும் புத்தாக்கமான நிதி நிறுவனங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. நிலைபேற்றியல், முன்மாதிரியான நிறுவன ஆட்சி நிர்வாகம், பொறுப்புக்கூறல், மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் வலுவான அர்ப்பணிப்புடன் உள்ளது. நீண்ட தூரம் பயனளிக்கும் தொழில்நுட்ப புத்தாக்கங்கள் மற்றும் அதிநவீன நிதி தீர்வுகள் மூலம் நிதிச் சேவைத் துறையை ஒட்டுமொத்தமாக மாற்றியமைப்பதில் இது புகழ்பெற்றது.