இலங்கை இராணுவ பயிற்சி பாடசாலை தங்குமிட மற்றும் தனிமைப்படுத்தல் தொகுதியின் முதல் கட்ட நிர்மாணப் பணிகள் CDB இன் ரூ. 10 மில். நிதியுதவியில் பூர்த்தி

இலங்கை இராணுவ மாதுரு ஓயா பயிற்சி பாடசாலையில் நவீன வசதிகள் படைத்த தங்குமிட மற்றும் தனிமைப்படுத்தல் நிலையத்தின் முதற் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சியின் (CDB) 10 மில்லியன் ரூபாய் நிதி உதவியில் இந்த நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் தடுப்பு நிலையத்தின் (NOCPCO) நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்தத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டில் நாட்டில் தொற்றுப் பரவல் உச்சம் தொட்டிருந்த நிலையில் இந்தத் திட்டத்துக்கு பங்களிப்பு வழங்குவதற்கு கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில் CDB இனால் இந்த நிர்மாணப் பணிகளுக்கு பங்களிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் தனிமைப்படுத்தல் நிலையமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போது மாதுரு ஓயா பயிற்சி பாடசாலையின் மாணவர்களுக்கான தங்குமிட வசதியாக பயன்படுத்தப்படும். எவ்வாறாயினும், இந்தத் தொகுதியில் காணப்படும் வசதிகள் காரணமாக, அவசியமாயின் வட மத்திய மாகாணத்தில் தனிமைப்படுத்தல் நிலையமாக துரித கதியில் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்டுள்ள முதல் தொகுதியில் 64 நபர்களை தங்க வைக்க முடியும். மொத்தத் தொகுதியும் அங்கவீனமானவர்களுக்கு பயன்படுத்த வசதியான முறையில் அமைந்துள்ளது. இந்தத் தொகுதியின் கீழ் மாடியை பயிற்சி நிலையத்தின் கட்டளையிடும் அதிகாரி பிரிகேடியர் நஜீவ எதிரிசிங்க RWP RSP psc Hdmc இனால் இராணுவத்தினரின் பிரசன்னத்தில் திறந்து வைத்தார்.

CDB இன் நிறைவேற்றுப் பணிப்பாளரும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரியுமான தமித் தென்னகோன் கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய சொத்தாக இந்தத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் தேவை எழுந்தால், இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. இலங்கை மக்களின் நலனை மேம்படுத்துவதற்கான CDB இன் அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது.” என்றார்.

கட்டளைத் தளபதி பிரிகேடியர் எதிரிசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “காலப் போக்கில் இந்த கட்டடத்தின் நோக்கம் மாற்றம் பெற்ற போதிலும், இந்தத் தொகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு CDB இன் அர்ப்பணிப்பு என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். தொற்று நோய்கள் உச்ச அளவில் பரவாத காலகட்டத்தில், இந்தத் தொகுதி இலங்கையின் எதிர்கால படை வீரர்களை பயிற்சிகளுக்காக வரவேற்கும் பகுதியாக அமைந்திருக்கும் என்பதுடன், தமது கற்கைகளை அவர்களுக்கு தொடர்வதற்கு உதவியாக அமைந்திருக்கும்.” என்றார்.

இந்த வைபவத்தில் பங்கேற்றிருந்தவர்களில் இலங்கை இராணுவ பயிற்சி பாடசாலையின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அதிகாரிகள் அடங்கியிருந்தனர். இந்த நிகழ்வு நேரலையாக இணையவழியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

maduru oya