40ஆவது மெர்க்கன்டைல் தடகள போட்டியில் வெற்றியுடன் மிளிர்ந்த CDB அணி

Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனமானது 40ஆவது வர்த்தக மெர்க்கன்டைல் தடகள போட்டித் தொடரில் (Mercantile Athletic Meet) வலிமையான செயல் திறனுடன் வெற்றிக் கோட்டை கடந்துள்ளது. தொடர்ச்சியான ஒப்பிட முடியாத சாதனைகளுடன் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் விளையாட்டு அணிகளுக்கு மத்தியில் தனக்கான இடத்தை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. CDB அணியின் சிறப்பான வெளிப்பாடானது, புதிய போட்டித் தொடர் சாதனைகள் (Meet Records), தனிநபர் பட்டங்கள் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் புள்ளிப்பட்டியல் ஆகியவற்றின் மூலம் தடகளத் திறமையையும், வெற்றிக்கான கலாசாரத்தை மேம்படுத்துவதிலான அர்ப்பணிப்பையும் CDB இங்கு வெளிப்படுத்தியுள்ளது.

இவ்வருடம், CDB வீரர்கள் குறிப்பிடும்படியான சாதனை முறியடிப்புகளை முன்னெடுத்திருந்தனர். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பக்தி விஜேசிங்க 8.85 மீற்றர் தூரத்தை பதிவு செய்து புதிய போட்டித் தொடரின் சாதனையைப் படைத்தார். அதேவேளை, 30 வயதுக்கு மேற்பட்ட 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயான் தந்திரிகே 23.68 செக்கன்களில் கடந்து சாதனை படைத்தார்.

சம்பியன்ஷிப் பிரிவில், நீளம் பாய்தலில் ஏ.பீ. கிருஷாந்தன் 7.18 மீற்றர் எனும் புதிய சாதனையைப் பதிவு செய்தார். அத்துடன் உமாயா ரத்நாயக்க 400 மீற்றர் தடை தாண்டி ஓட்டப் போட்டியில் 57.87 செக்கன்களில் நிறைவு செய்து CDB இன் பட்டியலில் மற்றுமொரு சம்பியன்ஷிப் சாதனையை சேர்த்தார்.

இதேவேளை, புதியவர்கள் பிரிவில் (Novices Category), திவியன் புவிகா 110 மீற்றர் தடை தாண்டி ஓட்டத்தை 17.30 செக்கன்களில் கடந்து, ஒப்பிட முடியாத செயல் திறன் மூலம் சாதனையை நிலைநாட்டினார்.

புதிய சாதனைகளுக்கு அப்பால், CDB வீரர்கள் பல்வேறு தனிப்பட்ட சிறப்பான வெற்றிகளை கொண்டு சேர்த்தனர். பக்தி விஜேசிங்க 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான பிரிவில் சிறந்த வீராங்கனை விருதை வென்றார். அதே வேளை, ஏ. பீ. கிருஷாந்தன் சம்பியன்ஷிப் ஆண்கள் பிரிவின் சிறந்த வீரர் மற்றும் முழுத் தொடரின் ஆண்கள் பிரிவின் சிறந்த வீரர் ஆகிய இரண்டு பட்டங்களையும் வென்று இரு பட்ட வெற்றியாளராக மிளிர்ந்தார். மைதானத்தில் அவரது ஆதிக்கம் இப்போட்டித் தொடரின் செயல் திறன் மிக்க நட்சத்திரங்களில் ஒருவராக அவரை மிளரச் செய்தது. முழுத் தொடரின் ஆண்கள் பிரிவின் சிறந்த வீரர் பட்டத்தை CDB அணி தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முழுப் போட்டித் தொடரிலும் CDB இன் கூட்டு முயற்சிகள் மூலம், வலுவான பெறுபேறுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. போட்டியிட்ட 51 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மத்தியில், 165 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தை நிறுவனம் பிடித்தது. CDB அணியானது, சம்பியன் பிரிவில் பெண்கள் மற்றும் ஆண்கள் முழுத் தொடரின் சம்பியன்ஷிப் பட்டங்கள் இரண்டையும் கைப்பற்றியமையானது, அணியின் பலம், நிலையான தன்மை மற்றும் போட்டி மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது.

40ஆவது மெர்க்கன்டைல் தடகள போட்டி தொடரில் நிறுவனம் அடைந்த வெற்றியானது, தடகளச் சாதனைகளை தாண்டி, பல்துறைசார் நிபுணர்களை உருவாக்குவதற்கும், விளையாட்டு மனப்பான்மையை வளர்ப்பதற்கும், தமது ஊழியர்களை பணிகளுக்கு அப்பால் பல்வேறு விடயங்களிலும் சிறந்து விளங்கும் வகையில் வலுவூட்டுவதற்குமான CDB நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. ஈடுகொடுக்கும் திறன், குழுப்பணி மற்றும் செயல்திறனில் விசேடத்துவம் ஆகியவற்றை பாராட்டுவதன் மூலம், தொடர்ச்சியாக களத்திலும் வெளியிலும் மேலோங்குகின்ற, வெற்றி பெறும் கலாசாரத்தை CDB வளர்த்து வருகிறது.


logo