CDB மற்றும் SLACD ஆகியன இணைந்து நவீன வசதிகள் படைத்த Autism இடையீட்டு நிலையத்தை தென் மாகாணத்தில் நிறுவியுள்ளது

 

சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) மற்றும் சிறுவர் அபிவிருத்திக்கான இலங்கை சம்மேளனம் (SLACD) ஆகியன “பிரகதி” தென் மாகாண ஒட்டிசம் மற்றும் நரம்புவிருத்தி இடையீட்டு நிலையத்தை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளன. இதனூடாக, “ஒட்டிசத்துக்கு எதிராக முன்கூட்டியே செயலாற்றுங்கள்” எனும் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக இது அமைந்துள்ளது.

கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள இந்த நவீன வசதிகளுடனான நிலையத்தில், ஒட்டிசம் குறைபாட்டைக் (ASD) கொண்ட சிறுவர்களுக்கு எதிர்பார்ப்புகள் மற்றும் ஆதரவை பெற்றுக் கொடுக்கும் வகையில் ரூ. 45 மில்லியனுக்கு அதிகமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ASD குறைபாட்டைக் கொண்ட பரந்தளவு சிறுவர்களின் தேவைகளுக்கு சேவையாற்றும் வகையில் பிரகதி இடையீட்டு நிலையம் அமைந்துள்ளது. சிகிச்சையளிப்பு அறைகளினூடாக, கவனக்குலைப்பு இல்லாத சூழல் வழங்கப்படுவதுடன், அதிகளவு பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களினூடாக பிரத்தியேகமான பராமரிப்பு வழங்கப்படுகின்றது. இதேவேளை, கண்காணிப்பு அறையினூடாக, நிபுணர்களுக்கு இரகசியமான முறையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுவதுடன், சிறுவர்களின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது. கட்டமைக்கப்பட்ட இடையீட்டு திட்டங்களுக்கமைய முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு உதவியாக இந்த அறைகள் அமைந்திருப்பதுடன், சிறந்த சுகாதாரத்தை நோக்கிய ஒவ்வொரு பிள்ளையின் பயணத்தையும் உறுதி செய்கின்றது. அத்துடன், சிறுவரின் விருத்தி என்பது நெருக்கமாக கண்காணிக்கப்படுவதுடன், செம்மையாக்கப்படுகின்றது.

Sensory Gym ஊடாக உணர்திறன்சார் ஒன்றிணைப்பு செயற்பாடுகளில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், இயக்கத்திற்குரிய திறன் விருத்தி தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. சிறுவர்களால் சிகிச்சைசார் செயற்பாடுகளில் ஈடுபடக்கூடிய ஆற்றல்வாய்ந்த பகுதி வழங்கப்படுவதுடன், இதனூடாக அவர்களின் குறிப்பிட்ட உணர்திறனுக்கான குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளன. இந்த செயற்பாடுகளினூடாக, உணர்திறனை ஏற்படுத்தும் ஜிம் பகுதிகளைக் கொண்டு சிறுவர்களுக்கு தமது உணர்திறன் மற்றும் இயக்கஆற்றல் திறன்களை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கப்படுவதுடன், அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கும் பங்களிப்பு வழங்கப்படுகின்றது.

Multi-Disciplinary Team (MDT) அறையினூடாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மத்தியில் ஒன்றிணைப்பு ஏற்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது. ஒவ்வொரு பிள்ளையின் பிரத்தியேகமான தேவைகளுக்கு பொருந்தக்கூடிய வகையிலமைந்த கல்விசார் ஆதரவுக்கான விசேடத்துவமான வசதிகளைக் கொண்ட விசேட கல்விப் பிரிவும் அமைந்துள்ளது. சிறுவர்கள் உள்ளடக்கமான கல்வியை பெற்றுக் கொள்வதை இது உறுதி செய்வதுடன், அவர்களின் சவால்களை இது உள்வாங்குவது மாத்திரமன்றி, அவர்களின் ஒட்டுமொத்த விருத்தி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.

சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு வலுவூட்டும் வகையில், இந்த நிலையம் விசேட ஓய்வறை பயிற்சி வசதிகளை கொண்டுள்ளது. இங்கு சிறுவர்களுக்கு பொருத்தமான கழிவறை பழக்கங்கள் தொடர்பான விதிமுறைகள் பற்றிய பயிற்றுவிப்பு வழிகாட்டல்கள் வழங்கப்படுகின்றன. தினசரி வாழ்க்கையின் இந்த முக்கியத்துவமான தருணத்தில் அவர்களின் குழந்தையின் விருத்திக்கு அவசியமான அறிவு மற்றும் வளங்கள் போன்றனவும் பெற்றோர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பிரகதி நிலையத்தைச் சேர்ந்த அர்ப்பணிப்பான அணியினர் உயர் பயிற்சி பெற்ற சிகிச்சையாளர்களை கொண்டுள்ளதுடன், அவர்கள் பல வருட அனுபவங்களையும் கொண்டுள்ளனர். இதனூடாக சிறுவர்களுக்கு உயர் மட்ட பராமரிப்பு மற்றும் ஆதரவு ஆகியன வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகின்றன. நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் இந்த கவனம் வியாபித்துள்ளதுடன், சிகிச்சையின் உள்ளக அம்சங்களில் ஒன்றாக தாய்மாருக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுகின்றது. வீடுகளில் சிகிச்சையை தொடர வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, சிறுவர்களின் பராமரிப்பில் பெற்றோர்கள் திகழ்வதற்கான வலுவூட்டலை வழங்க பிரகதி நிலையம் அமைந்துள்ளது.

20ஆவது வருட பூர்த்தியை குறிக்கும் வகையில், CDB மற்றும் SLACD ஆகியன “ஒட்டிசத்துக்கு எதிராக முன்கூட்டியே செயலாற்றுங்கள்” திட்டத்தை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்திருந்தன. ASD தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், ஆரம்ப நிலையில் இனங்காணலுக்கு உதவுதல் மற்றும் உரிய நேரத்தில் இடையிடல் போன்றவற்றை உறுதி செய்கின்றது. அதன் பிரகாரம், ஒட்டிசம் நம்பிக்கை நிதியம் என்பது இந்த கைகோர்ப்பின் பெறுபேறாக அமைந்துள்ளது. ஊடக பிரச்சார செயற்பாடுகள், வெளிக்கள நிகழ்ச்சிகள் மற்றும் இடையீட்டு நிலையங்களை நிறுவுதல் போன்றன இந்த நம்பிக்கை நிதியத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றன.

இடையீடுகள் தொடர்பில் முன்னர் CDB இனால் முன்னெடுக்கப்பட்டிருந்த செயற்பாடுகளின் அங்கமாக, 2018 ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளியக சிகிச்சை விளையாட்டுப் பகுதி ஒன்று நிறுவப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் “பிரகதி” சிறுவர் இடையீட்டு நிலையமும் நிறுவப்பட்டது.

CDB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நானயக்கார கருத்துத் தெரிவிக்கையில், “நிதிசார் வருமானங்களினூடாக மாத்திரம் உண்மையான வெற்றிகரமான செயற்பாடு என்பது மதிப்பிடப்படாது, மாறாக சமூகத்தில் நாம் ஏற்படுத்தும் நேர்த்தியான தாக்கத்தின் பிரகாரம் மதிப்பிடப்பட வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். “பிரகதி” தென் மாகாண ஒட்டிசம் மற்றும் நரம்புவிருத்தி இடையீட்டு நிலையம் என்பது ஒரு திட்டம் என்பதற்கு அப்பாற்பட்டது. சிறுவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான எமது ஒப்பற்ற அர்ப்பணிப்புக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. CDB ஐ பொறுத்தமட்டில், எமது நிலைபேறான நிகழ்ச்சிநிரலில் பிரதான தூணாக அமைந்துள்ளதுடன், இதன் கீழ் சிறுவர் சுகாதாரம் மற்றும் நலனை மேம்படுத்துவது என்பது முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது. இது ஆழமான உணர்வுபூர்வமான பயணமாகும். ஒவ்வொரு பிள்ளையும் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும், முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகளை கொண்டுள்ளது எனும் நம்பிக்கையின் அடிப்படையில் நாம் செயற்படுகின்றோம்.” என்றார்.

SLACD தலைவர், பேராசிரியர் ஹேமமாலி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “ஆயிரக்கணக்கான உயிர்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலில் நாம் இன்று இருக்கின்றோம். “பிரகதி” தென்மாகாண ஒட்டிசம் மற்றும் நரம்புவிருத்தி இடையீட்டு நிலையத்தில் CDB இன் அர்ப்பணிப்பு மற்றும் குறிப்பிடத்தக்களவு முதலீடு ஆகியன, ஒட்டிசம் குறைபாட்டை கொண்ட சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் உண்மையில் ஒரு அதிசயமாக அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் தாக்கம் என்பது அதன் சுவர்களுக்கு அப்பால் செல்லக்கூடியது என்பதுடன், சிறுவர்கள் மற்றும் குடும்பங்களின் இதயங்களுக்கு சென்றடைவதாக அமைந்துள்ளது. கனவுகள் மெய்ப்படுத்தப்படும் பகுதியாக இது அமைந்திருப்பதுடன், சவால்களுக்கு ஒப்பற்ற ஆதரவுகள் வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு பிள்ளைக்கும் தமது முழு ஆற்றலையும் எய்துவதற்கு முழு வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.” என்றார்.

பிரகதி தென் மாகாண ஒட்டிசம் மற்றும் நரம்பியல்விருத்தி இடையீட்டு நிலையம் என்பது ஒரு வசதி என்பதற்கு அப்பாற்பட்டது. முன்னேற்றம், எதிர்பார்ப்பு மற்றும் ஒட்டிசம் குறைபாடு கொண்ட தென் மாகாண சிறுவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் ஒப்பற்ற ஆதரவை வழங்குவதாக அமைந்துள்ளது. இந்த நிலையம் எதிர்பார்ப்பின் சமிக்ஞையாக அமைந்திருப்பதுடன், இந்த சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு அவசியமான பல்வேறு சேவைகள் மற்றும் வளங்களை வழங்குவதாக அமைந்துள்ளன.

நிலையத்தின் திறப்பு நிகழ்வுக்கு நிகராக தென் மாகாணத்தில் விசேடமாக இலக்கு வைக்கப்பட்ட தொடர்ச்சியான சென்றடைவு நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும், முக்கியத்துவம் வாய்ந்த தகவல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அம்சங்கள் போன்றன பரந்த சமூகத்தில் அறிமுகம் செய்யப்படுவதாக அமைந்திருக்கும்.